முகப்பு »  குழந்தை »  பருவ வயதில் வேண்டாம் பேலியோ

பருவ வயதில் வேண்டாம் பேலியோ

டீனேஜர்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிப்பானங்கள் போன்றவற்றை தவிர்த்து இயற்கையாக கிடைக்கக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்

பருவ வயதில் வேண்டாம் பேலியோ

கல்லை தின்றாலும் செரிக்கும் வயதுதான் பருவ வயது. வளரும் குழந்தைகளுக்கு கட்டாயமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை கொடுக்கும் போதுதான் அவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். டீனேஜ் பருவத்தில் உடலுக்கு நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது. ஆனால் தற்போதைய டீனேஜர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது கொண்ட அதீத கவனத்தால் புதிது புதிதாக வரும் டயட் முறைகளை பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர். ஹெல்த் கான்ஷியஸின் வெளிப்பாடுதான் இது. அண்மையில் முகநூலில் எங்கு பார்த்தாலும் நான் பேலியோ டையட் ஃபாலோ பண்றேன் என்றும், இன்று நான் இதை சாப்பிட்டேன் என்றும் பதிவேற்றுகிறார்கள். அதுபோக, இந்த டயட்டை ஃபாலோ செய்பவர்கள் அனைவரும் தங்களுக்கு என தனியே ஒரு முகநூல் பக்கத்தையும் வைத்துள்ளனர். அங்கு சென்று பார்த்தோமானால் பேலியோவிற்கு முன் பேலியோவிற்கு பின் என தங்கள் புகைப்படங்களையும் பதிவேற்றியுள்ளனர். எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்பதை போல காட்சியளிக்கிறது அப்படங்கள். ஆச்சரியமான ஒன்று தான்.

முதலில் பேலியோ என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம். No Carb No Sugar என்பதுதான் பேலியோவின் அடிப்படை தத்துவம். அதாவது கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உணவுகளை அடியோடு தவிர்ப்பது. நாம் உண்ணும் பெரும்பாலான உணவில் இவை இரண்டும் தான் நிறைந்திருக்கிறது. இதை தவிர்த்துவிட்டால் வேறு எதை சாப்பிடுவது என்ற கேள்வி எழுகிறதல்லவா? அதற்கு பதிலாக கொழுப்பை உணவாக உட்கொள்ள சொல்கிறார்கள். இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய் வர காரணமே மாவுச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதால்தான். நம் உடலுக்கு தேவையான சத்து கிடைக்காத போது உடல் தானே சேமித்து வைத்த கொழுப்பை எரித்துப் பயன்படுத்த தொடங்குகிறது. இதனால் இடை குறைகிறது. கொழுப்பை சாப்பிடுவதனால் அது எரிக்கப்பட்டு சக்தியாக மாறுகிறது. அப்படியானால் கொழுப்பை குறைக்க கொழுப்பையே சாப்பிடுவதுதான் பேலியோ டெக்னிக்.

வீகன் டயட்டில் பால் மற்றும் பால் பொருட்களை தவிர்த்து விடுகிறார்கள். இந்த டயட் முறைகள் எல்லாம் குறிப்பிட்ட வயதிற்கு மேல் பின்பற்றலாம். ஆனால் பருவ வயதினர்களுக்கு இம்மாதிரியான டயட்கள் தேவையற்றது. உடல் பருமன் அதீதமாய் இருப்பவர்கள் மட்டும் பேலியோ போன்ற டயட் முறையை பின்பற்றலாம். எளிமையாக செரித்து உடனடியாக சத்துக்களை உடலுக்கு தருவது கார்போஹைட்ரேட். கேக், சாக்லேட் போன்ற இனிப்பு வகைகள் எளிதில் ஜீரணித்துவிடும். இது உடனடியாக இரத்ததில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும். அடிக்கடி இப்படியான உணவுகளை எடுத்துக்கொண்டால் உடல் பருமன் அதிகரிப்பதோடு, சர்க்கரை நோயும் வரக்கூடும்.


காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, விதைகள் மற்றும் கொட்டைகள் ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமானம் தாமதமாகும். இதனால் உடலுக்கு சத்துக்கள் மெதுவாக கிடைக்கும். உடல் சோர்வில்லாமல் இருக்க உதவுகிறது. இம்மாதிரியான சத்துக்கள் உடலுக்கு நிச்சயம் தேவை. குழந்தைகள் இவற்றை உணவில் தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், உடல் வளர்ச்சிக்கும் ஏற்றதாய் இருக்கிறது. உடலுக்கு உடனடியாக ஆற்றல் அளிக்ககூடியது மாவுச்சத்து நிறைந்த உணவுகள். இதனால் டீனேஜர்கள் இதனை தவிர்க்க கூடாது. பருவ வயதில் உட்கொள்ளப்படும் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் இதர சத்துக்களால் மட்டுமே உடலில் எலும்பு வலுப்பெறுகிறது.

டீனேஜர்கள் துரித உணவுகள், பதப்படுத்தப்பட்டவை, குளிப்பானங்கள் போன்றவற்றை தவிர்த்து இயற்கையாக கிடைக்கக் கூடிய எல்லா உணவுகளையும் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். மைதா தவிர்த்து, அரிசி, ராகி, கோதுமை போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டாம். இனி டயட்டிற்கு சொல்லுங்கள் பை பை.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------