முகப்பு »  நலவாழ்வு »  ஃபேஸ்புக்கின் இருண்ட பக்கம்: அதிகரிக்கும் லைஃவ் ஸ்ட்ரீமிங் தற்கொலைகள் தீர்வுதான் என்ன?

ஃபேஸ்புக்கின் இருண்ட பக்கம்: அதிகரிக்கும் லைஃவ் ஸ்ட்ரீமிங் தற்கொலைகள் தீர்வுதான் என்ன?

சமீப காலங்களில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

ஃபேஸ்புக்கின் இருண்ட பக்கம்: அதிகரிக்கும் லைஃவ் ஸ்ட்ரீமிங் தற்கொலைகள் தீர்வுதான் என்ன?

இந்த நவீன காலத்தின் பெரிய வரமாக கருதப்படுவது தகவல் தொழில் நுட்பம் மட்டுமே. தகவல் தொழில் நுட்பத்தால் நமக்கு எழும் கேள்விகளையும் முக்கிய தேவைகளையும் விரல் நுனியால் தேய்த்து விடை தேடிக் கொள்கிறோம். தொழில் நுட்பத்தின் நன்மைகள் ஒருபக்கம் இருக்க, அது கொடுக்கும் மன உளைச்சலும் அமைதியின்மையும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. சமூக வலைதளங்கள் அதிகரித்து விட்ட நிலையில் ஃபேஸ் புக் நிறுவனமும் மக்கள் மத்தியில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள புது புது அப்டேட்களுடன் வலம் வரத் தொடங்கி விட்டது. அதன்படி ஃபேஸ் புக் நிறுவனம் 2016 -ம் ஆண்டு வீடியோ காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பும் சேவையை அறிமுகப்படுத்தியது. இதற்க்குப் பின் ஃபேஸ் புக் பயனாளர்கள் பலரும் வீடியோக்களை ஒளிபரப்பும் சேவையை செயல்படுத்தத் தொடங்கினார்கள். நிகழ்ச்சியை நேரடிக்காட்சியாக ஒளிபரப்புவதோடு பலர் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளும் காட்சியையும் நேரடியாக ஒளிபரப்ப தொடங்கியுள்ளனர். ஃபேஸ் புக் போன்ற சமூக வலைதளத்தின் மற்றொரு இருண்ட பக்கம் இது தான்.

சமீப காலங்களில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மன அழுத்தம் கொடுக்கும் வேலைச் சூழலும் தனிப்பட்ட வாழ்வில் கிடைக்கும் ஏமாற்றங்களும் தற்கொலை எண்ணத்தை அதிகப்படுத்துகிறது. சமூக வலைதளங்கள் கொடுத்துள்ள நட்புசூழலும், தன மனதில் தோன்றும் வெறுமைகளையும் சொல்லி ஆற்றுப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளும் இருந்த போதிலும் வாழ்வின் நெருக்கடிகள் பலரை தற்கொலைக்கு தள்ளவே செய்கின்றன.

தற்கொலை ஒரு கோழைத்தனம் என்று பேசியவர்கள் கூட மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதை பார்க்கிறோம். தற்கொலை செய்யும் எண்ணம் ஒருபுறம் அதிகரித்தாலும் அதை பலர் பார்க்க லைஃவ் ஸ்ட்ரீம்களில் தற்கொலை செய்து கொள்ளும் போக்கும் அதிகரித்துள்ளது. நேரடி ஒளிபரப்பு மூலம் இந்த ஆண்டு ஆகஸ்டு 1 அன்று குராகன் என்னும் இளைஞன் தற்கொலை செய்து கொண்டதை சுமார் 2300 பேர் பார்த்துள்ளனர்.


மற்றொருவர் மனைவியுடன் சண்டையிட்டு தற்கொலைக்கு முயன்றவர் ஃபேஸ் புக்கில் தான் தற்கொலை செய்து கொள்வதை நேரடியாக ஒளிபரப்பு செய்துள்ளார். ஏன் தற்கொலை செய்கிறேன் என்பதை சொல்லிவிட்டு பெட் ரூமில் தூக்கு மாட்டுவது முதல் அவர் துடிதுடித்து இறப்பது வரையான காட்சியை அவரின் மரணத்தை அடையாளந் தெரியாத 1500 பேர் அதை பார்த்துள்ளனர். அவர் இறந்த பின்னும் லைஃப் ஸ்ட்ரீம்மிங் ஓடிக்கொண்டிருக்கிறது. இறந்தவரின் மனைவி பெட் ரூமிற்கு வந்து அதைக்கண்டு அதிர்ச்சியடைந்து அழுகும் காட்சியும் அதில் பதிவாகியிருந்தது.

அந்த தற்கொலைக்காட்சியை பார்த்த ஒருவர் கூட அவரின் மரணத்தை தடுக்க முயற்சிகள் எடுக்கவில்லை.

தற்கொலையை நேரடியாக ஒளிபரப்பும் மனநிலை குறித்தும் தற்கொலையை நேரடியாக பார்க்கும் பார்வையாளர்களின் மனநிலை எப்படி புரிந்து கொள்வது இதைத் தடுக்க என்னென்ன செய்யலாம் என்ற கேள்விகளை உளவியல் நிபுணர் டாக்டர் வந்தனாவிடம் முன்வைத்தோம்.

இன்றைய காலத்தில் அனைவருக்கும் கிடைக்க கூடிய தொழில் நுட்ப சாதனமாக ஸ்மார்ட் போனும் அளவில்லாத டேட்டாக்களும் கிடைக்கும் சூழலில் இந்த விதமான தற்கொலைகள் நடப்பது என்பது இன்றைய நாளின் ட்ரெண்டாக இருப்பதில் ஆச்சர்ய பட ஏதுமில்லை என்றார்.

லைஃவ் ஸ்ட்ரீம்மிங்கில் தற்கொலை செய்து கொள்பவர்கள் முதலில் தான் ஏன் தற்கொலை செய்து கொள்கிறேன் என்பதற்கான வாக்குமூலத்தை கொடுத்துப் பின் தன்னுடைய தற்கொலைக்கு யார் காரணம் என்பதை சொல்லி அவர்களை குற்றவுணர்வுக்கு உள்ளாக்குவதற்கான முயற்சிகள் செய்வதையும் பார்க்கலாம். லைஃவ் ஸ்ட்ரீம்மிங்கில் நடக்கக்கூடிய தற்கொலை இதைத்தான் மேற்கொள்கிறது. மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் பார்ப்பதால் அதனால் தனக்கு கிடைக்கும் பரிதாபமும் தனக்கு உதவி கிடைக்காத என்கிற ஏக்கமும் மட்டுமே இந்த வீடியோ காட்சிகளில் இருக்கும் என்கிறார்.

இதைப்பார்க்கும் மக்களின் மனநிலை என்பது ‘கூட்டத்தின் மனநிலை' க்கு ஒப்பானது என்று கூறுகிறார். சாலையில் ஒரு விபத்து நடந்தால் அதை கூட்டத்தோடு கூட்டமாக நின்று பார்ப்பது போல்தான் மக்கள் இதைப் பார்க்கிறார்கள். பார்க்கும் மக்களும் பார்ப்பவர்களில் யாராவது ஒருவர் தகவல் சொல்லி காப்பாற்றி விடுவார்கள் என்று எண்ணியே முழு நீள தற்கொலையையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்கிறார்.

பார்க்கிற யாரும் உதவிக்கான முன்னெடுப்புகளை செய்வதில்லை என்று கூறுகிறார்.

தற்கொலை என்பது உதவி கேட்பதற்கான ஒரு வகை வழிமுறை என்கிறார். அதாவது உதவிக்கான அழுகை என்று இதைக் குறிப்பிடுகிறார். தற்கொலை செய்யும் முடிவு திடீரென வருவதற்கானது கிடையாது. தனக்கு நடந்த விஷயங்களை பல நாட்களாக நினைத்து கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகிப் பின் இறுதியாகவே தற்கொலை என்ற முடிவை எடுக்கிறார்கள். தற்கொலை செய்பவர்கள் தங்களின் மன அழுத்தத்தை பல வகையிலும் வெளிப்படுத்துவதைப் பார்க்கலாம். நண்பர்களிடம் தொடர்ச்சியாக அதைக் குறித்து மட்டுமே பேசுவார்கள்.இதுதான் அவர்கள் பக்கமிருந்து கிடைக்கும் சமிக்கை.

தோல்வியை எதிர்கொள்ள முடியாத, தாங்கும் திறன் இல்லாத சிலர் மட்டுமே தற்கொலை முயற்சியை மேற்கொள்கிறார்கள்.

இந்த உணர்வை வெளியில் இருந்து பார்க்கும் பெரும்பாலானவர்கள் இதற்கு போய் தற்கொலை செய்து கொள்வதா...? என்று கேட்பதைப் பார்க்கலாம். ஆனால் கடும் மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு அவர்கள் கேட்பதும் தேடுவதும் மட்டுமே அவர்களின் உலகமாக இருக்கும். அதனால் அவர்களின் உணர்வுகளை சாதாரணமான ஒன்றாக அணுகாமல் நண்பர்கள் கூடுதல் அக்கறையுடனும் பொறுப்புடனும் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி வாழ்க்கையை வாழ்வதற்கு ஏற்ற வகையில் அவர்களுக்கு ஊக்கத்தை கொடுக்க வேண்டுமென்கிறார் மருத்துவர்.

மேலும் மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உளவியல் ஆலோசனைகளை முறையான மருத்துவர்களிடம் பெறுவது தான் சரியான தீர்வாக அமையும் என்கிறார்.

எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு தன் வாழ்வில் வரும் தோல்விகளையும் ஏற்று அதையும் வாழ்வின் ஒரு பகுதியாக பார்க்கக்கூடிய பக்குவத்தையும் பெற்றோர்கள்தான் கொடுக்க வேண்டுமென்கிறார். கேட்ட உடனே பொருட்களை வாங்கிக் கொடுத்து வளர்க்கும் முறை மிகவும் தவறானது என்கிறார். தன் வாழ்வில் 'நோ' என்ற மறுப்பை அறியாத குழந்தைகள் தான் சின்னச் சின்ன தோல்விகளையும் ஏமாற்றத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்கிறார்கள். கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்காமல் மறுப்பை பதிலாக கொடுக்க வேண்டுமென்கிறார். சில விஷயங்களை சில நாட்கள் தள்ளிப் போட்டு அதை கிடைக்கச் செய்யுங்கள். தோல்வியை ஒரே முறையாக ஒப்புக் கொள்ளாமல் மீண்டும் முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும் என்பதையும் எடுத்துச் சொல்லி குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்கிறார் உளவியல் நிபுணர் வந்தனா.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------